அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பியனுப்புவதன் மூலம் எமது கரங்களிலும் தமிழரின் இரத்தத்தினை வழிந்தோட விடப்போகின்றோமா என்று பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Siobhain McDonagh நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் இருந்து தமிழர்கள் சிலர் பிரத்தியேகமாக அமர்த்தப்பட்ட தனியார் வானூர்தியில் இன்று திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களை சென்றடைவார்களா என்பது பற்றி தெரியாது.
இதனைவிட மிக மோசமாக செயற்பாடு என்னவெனில் இவர்களில் சிலரது இரகசிய ஆவணங்களை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரமைப்பும், குடிவரவுத் திணைக்களமும் இலங்கைத் தூதரகத்துடன் பரிமாற்றம் செய்திருக்கின்றன.
என்னைப் பொறுத்தளவில் இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்புப் பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பாக ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், இவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழ் அகதிகள் அங்கே கைது மற்றும் வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள் எனத் தெரிந்து கொண்டும் பிரித்தானிய அரசாங்கம் நேற்று 40 தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.
எனவே, மதிப்பிற்குரிய துணை சபாநாயகர் அவர்களே, தமிழர்களை திருப்பி அனுப்புவது பற்றி பிரித்தானிய நாடாளுமன்றம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
திருப்பி அனுப்பாது தடுக்கப்போகின்றோமா அல்லது எமது கரங்களிலும் தமிழ் இரத்தத்தினை வழிந்தோட விடப்போகின்றோமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள் இலங்கை அரசாங்கத்தால் துன்புறுத்தப்படும் சில சம்பவங்களை அனைத்துலக மன்னிப்புச்சபையானது அடையாளம் கண்டுள்ளதால் பிரித்தானியாவிடம் அரசியல் தஞ்சம் கோரி நின்ற இலங்கைத் தமிழர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களிற்குத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என மன்னிப்புச் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பொது நலவாய அமைப்பில் முக்கிய பங்காற்றும் பிரித்தானியா, அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனில் அடைக்கலம் புகுந்திருந்த தமிழ் மக்கள் விடயத்தில் தனது கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment