பழைய புத்தகங்களின் நடுப்பக்கத்திலோ
பழைய டைரிகளின் அடிப்பக்கத்திலோ
பழைய மணிபர்ஸின் உள்பக்கத்திலோ
ஒளிந்திருக்கலாம் உங்கள் பழைய காதலியின் புகைப்படம்..
அடம்பிடித்து அவளிடம் வாங்கிக்கொண்ட
அந்தப்புகைப்படம் அப்போதைய உங்கள்
அன்றாட வஸ்துவாய் இருந்திருக்கும்..
உங்களுக்காக பிரயத்தனப்பட்டு அவள்
எடுத்துக்கொண்ட அந்தப்புகைப்படத்தில்
திணறும் சிரிப்பொன்றை செயற்கையாய் உதிர்த்திருக்கிறாள் அவள்
அந்தப்புகைப்படத்தை உங்கள் விரல்கள் தொட்டதைவிட
உங்கள் இதழ்கள்தான் அதிகம் தொட்டிருக்கும்..
தூங்கும்போதும் விழிக்கும்போதும்
நடக்கும்போதும் இருக்கும்போதும்
அழுதபோதும் தனித்தபோதும்
அதுவே உங்கள் ஆறுதல் சாதனம்..
அவளுடன் நேரில் பேச முடியாததையெல்லாம்
கொட்டித்தீர்த்தீர்கள்
செல்லமாய் திட்டி
செல்லமாய் முறைத்து
செல்லமாய் கொஞ்சி
செல்லமாய் மிஞ்சி..
சிலர் எரித்துவிட்டாலும்
சிலர் திருப்பிக்கொடுத்திருந்தாலும்
அணைந்து விடாத வேள்வியாய்
அவரவர் மனங்களில்
அது கனன்று கொண்டிருப்பது திண்ணம்..
காதலில் களித்தபோதும்
காதல் பிரிவில் தவிக்கும்போதும்
சுதந்திரமாய் எடுத்துப்பார்க்க முடிவதில்லை
அவள் புகைப்படத்தை..
எல்லோரும் தூங்கிய பின்னிரவில்
காதல் பிரிவின் சடுதியான கண்ணீரில்
அடிக்கடி நனையலாம் அந்தப்புகைப்படம்..
இப்போது ஒரு முறை
அதில் அவளது கண்களைப்பாருங்கள்
அதில் நிரம்பிவழியும் காதலை
இனி யாராலும் உங்களுக்குத்தர முடியாது..
-நிந்தவூர் ஷிப்லி-
மேலும் வாசிக்க இதனை Click உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...
கேள்விக்குள்ளாகும் யாழ்ப்பாணத்தின் இன்றைய கலாசாரம்
-
வணக்கம் நண்பர்களே இந்த முறை என் பதிவு சற்று சிறியதாகவும் ஒரு சமூக பிரச்சனை
அலது சீரழிவு தொடர்பானதாக அமைகின்றது .காரணம் பரீட்சைகள் வருகின்றமையே நேரம்
ஒதுக்...
13 years ago
0 comments:
Post a Comment