Wednesday, June 22, 2011


“ஏழை மக்களுக்கு உதவிட, வெகு விரைவில் மக்கள் இயக்கம் ஒன்றூ துவங்கப் போகிறேன்” என்று அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடிகர் சூர்யா கூறினார்.

சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் பவுண்டேஷன் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா சென்னையிலுள்ள பிலிம் சேம்பர் தியேட்டரில் இன்று நடை பெற்றது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது;

நான் சமூக சேவை செய்வதற்கு என் தந்தை சிவகுமார் தூண்டு கோலாக உள்ளார். அவர் கடந்த 32 வருடங்களாக ஏழைகளுக்கென பலவிதமான உதவிகள் வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு அப்பொறுப்பை நான் ஏற்றேன். அதன் பிறகு அகரம் பவுண்டேஷன் அமைப்பு துவக்கப்பட்டது.

இதன் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது மேலும் விரிவுபடுத்தப்படும். அடித் தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு எங்களால் முடிந்த பணிகளை செய்வோம்.

அகரம் கல்வி அறக் கட்டளை, விதை திட்டத்தின் கீழ் பண உதவி செய்வது மட்டுமின்றி இக்கால மாணவர்கள் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்வதற்கு தேவையான பயிற்சிகளையும், நிபுணர்கள் உதவியோடு செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவுவதற்காக அகரம் தன்னார்வலர்களின் உதவியோடு மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் அதற்காக வங்கிகளின் ஒத்துழைப்பு மற்றும் பல நல்ல உள்ளங்களின் நன்கொடை என ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த இயக்கம் மலரும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.’’ என்றார்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை 'மக்கள் இயக்கம்' என்ற அமைப்பாக அண்மையில் மாற்றினார். அவருக்கு போட்டியாக ஒருவேளை சூர்யாவும் 'மக்கள் இயக்கம்' தொடங்குகிறாரோ என்று எண்ணத் தோன்றினாலும், இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog